இலங்கை திருநாட்டின் தலையாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரதேசங்களில் தென்மராட்சிக்கும் சிறப்பான இடம் உண்டு.
கற்றவர்களும், கவிஞர்களும் நிறைந்த இப்பிரதேசம் முக்கனியும், முத்தமிழும் இழைந்து விளையாடும் இடமாகும்.
ஒரு காலத்தில் மாசோலை என்று அழைக்கப்பட்டு பின் மாசாலையாகி இன்று மீசாலையாக சிறப்பு பெற்று விளங்கும் மீசாலை கிராமம் பரந்த பரப்பையும் நெல் வயல்களிடையே தடாகங்களையும் வற்றாத நீரூற்று ஒன்றையும் தன்னகத்தே கொண்ட உழைப்பால் உயர்ந்த பசுமை நிறைந்த கிராமம்.
இங்கு மீசாலை மேற்கில் 1936.09.07 ம் நாள் கணபதி செல்லம்மா தம்பதியருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தவள் தான் பரமேஸ்வரி.
இவருக்கு ஒரு வயது மூத்தவளாக மகேஸ்வரியும், இளையவர்களாக சின்னமணி, தம்பு, குலவீரசிங்கம், நவமணி, ராஜேஸ்வரி, தனபாலசிங்கம், குணபாலசிங்கம் என நவரத்தினங்கள் குதுகலத்தின் இருப்பிடம் இவர்கள் இல்லம்.
தந்தையாரின் சந்தை குத்தகையிலும் தாயாரின் இடையார வியர்வை சிந்தலிலும் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தனர். பரமேஸ்வரி யா/மீசாலை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலைவன் பாடசாலையில் SJC வரை கற்ற தேர்ந்ததுடன் சிங்கள பாடத்திலும் எட்டாம் வகுப்பு சிறப்பு தேர்ச்சி பெற்று கல்வியில் சிறந்து விளங்கினார்.
இவருக்கு நெசவு ஆசிரியர் தொழில் கிடைத்த போதிலும் பெண்களை வேலைக்கு அனுப்ப தயங்கிய காலமாதலால் தந்தையார் இவரை தொழிலுக்கு அனுப்பவில்லை.
இருந்த போதிலும் தனது இளைய சகோதரர்களை கல்வி கற்க வைப்பதில் ஆர்வம் காட்டினர்.
வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பொருட்கள் சுற்றி வரும் எந்த ஒரு பத்திரிகை துண்டுகளையும் தூக்கி வீசாது அவற்றை படிப்பதில் ஆர்வம் காட்டினார்.
நேரிய சிந்தனையும் சேவை மனப்பாங்கும் கொண்ட இவர் பெண்ணியவாதியும் கவிஞருமாவார்.
தனது இருபதாவது வயதில் மீசாலை வடக்கு வேம்பிராயை பிறப்பிடமாகக் கொண்ட சின்னத்தம்பி, தெய்வானை பிள்ளை தம்பதியரின் ஏக புத்திரனான கதிரவேலுவை கைபிடித்து இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார்.
இல்லற வாழ்வின் நறுமணம் சுமந்து சிவகாமசுந்தரி (காமினி) கருணகிரி (கிரி) சூரிய குமாரி (வினோதினி) குமுதமனோகரி (குமுதினி) சுவேந்திரன் (காந்தன்) சதீஷ்குமார் (சசி) ஆகிய ஆறு தருக்களை ஈன்றெடுத்து அறுசுவை என வளர்த்து வந்தார்.
உயர் கல்வி கற்று பெண்ணடிமை தளை உடைக்க நினைத்து தனது இலட்சியம் நிறைவேற தனது பிள்ளைகள் கல்வியில் உயர ஊக்குவித்தார்.
அடிமைத் தளை உடைக்க அரசியல் மேடைகளை களமாக்கி தனது மூத்த மகளை மேடைப் பேச்சாளர் ஆக்கி பெருமை கண்டதுடன், 1978, 1979 களில் வானொலி நிகழ்வுகளுக்கு ஆக்கங்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டார். இதன் ஒரு படியாக “இளஞ்சுடர்” நிகழ்ச்சிக்கு ஆக்கங்கள் எழுதி தனது பிள்ளைகளுடன் கிராமத்தின் இளைஞர், யுவதிகளையும் இணைத்து நிகழ்ச்சிகளை ஒருங்கமை குத்து ஒளிப்பதிவு செய்து பலரதும் பாராட்டுகளை பெற்றவுடன் இளைய தலைமுறையினரின் கலை ஆர்வத்தையும் வெளிக்கொணர்ந்தார்.
பெண் பிள்ளைகளை தன்னைப்போல எழுத்தாளர்களாகவும் விளையாட்டு வீராங்கனைகளாகவும் கண்டு பிள்ளைகளின் மூலம் தன் என்ன கனவுகளை நினைவாக்கி மகிழ்ந்த பெருமை இவருக்கு உண்டு.
விவசாயத்தை சுய தொழிலாகக் கொண்ட இக் குடும்ப சுமையில் பங்கு கொண்டு நீவில் உருத்திரபுரத்தில் இருந்த வயல்காணியில் தானும் கணவருடன் இணைந்து வருமானத்தை ஈட்ட பாடுபட்டதுடன் தமது பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தினார்.
இதன் பயனாக மூத்த மகளை பகுதி நேர ஆங்கில ஆசிரியராகவும் மற்ற இருவர்களையும் பட்டதாரி ஆசிரியராகவும் அதிபராகவும் கண்டு மன நிறைவு கொண்டார்.
1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் வடபகுதியை ஆக்கிரமித்து நின்ற வேளையில் பெண்களும், இளைஞர்களும் பல்வேறு இன்னல்களையும் எதிர்கொண்ட போது அயலவர்கள் அனைவரையும் தனது வீட்டிற்கு அழைத்து தைரியம் ஊட்டி இராணுவத்திடமிருந்து அனைவரையும் பாதுகாத்த பெருமை இவரை சாரும்.
இதன் காரணமாக இவரும் பிள்ளைகளும் சொல்லணா துன்பங்களை அனுபவித்தவுடன் தனது பிள்ளைகளை பாதுகாக்கும் வகையில் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்து நீவில் கிராமத்தில் குடி பெயர்ந்தார்.
1990களில் இளைய மகன் சதீஷ்குமார் காலச் சூழலுக்குள் தன்னை இணைத்து சாவடைந்து கொள்ள மகனை இறுதியில் காண முடியாத துன்ப வெள்ளத்தில் தன்னை மூழ்கடித்து அதற்குள் இருந்ரு மீளமுடியாது துயருற்றுக் கொண்டிருந்தவேளை 1991 இறுதியில் இளைய மருமகன் ஆனந்த நடராஜாவின் திடீர் மறைவும் அவரை நிரந்தர நோயாளி ஆக்கியது.
அதுமட்டுமன்றி 1997 இடப்பெயர்வு காலத்தில் தனது கணவனையும் இழந்து கைம்பெண்ணாகிய நிலையில் 2009 களில் நடைபெற்ற வன்னி யுத்தத்தில் மருமகன் இராசேந்திரத்தையும் இழந்து கொண்டதுடன் தாயார், சகோதரர்கள் என அடுத்தடுத்து ஏற்பட்ட இழப்புகள் மூலம் உள நெருடலுக்கு உள்ளாகி துன்பங்களை சுமந்தவர் ஆயினர்.
இத்தனைக்குள்ளும் தன் பிள்ளைகளின் வாழ்வோடும் ஆலய தரிசனங்களோடும் தன்னை இணைத்து 2012இல் வற்றாப்பலையிலிருந்து கால்நடையாக கதிர்காமம் சென்று வந்த இவர் 2015.11.18 ஆம் நாள் பூர்வ பக்க சப்தமி திதியில் கந்த சஷ்டி பாரணை நன்னாளில் இவ்வுலகை விட்டு தன் பக்திக்குரிய முருகப்பெருமானின் பாதார விந்தங்களில் இளைப்பாற சென்றுள்ளார்.
பிறப்பவர் அனைவரும் இறப்பது நியாதி என நிறைவடைவோம்.
